வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டத்தில் குழப்பம்!

வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் குழப்பம் காரணமாக இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று (12.04.2024) காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு இடம்பெறமாட்டாது எனவும், வெடுக்குநாறி மலையில் பல பிரச்சினைகள் நடந்தும் சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும், ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும் மக்கள் தெரிவித்ததுடன், அவர்களை வெளியேறுமாறு கோரியுள்ளனர்.

எனினும், சிவசேனை அமைப்பினர் வெளியேறாமையால் ஆத்திரமடைந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பக்தர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன், ஒரு வருடத்திற்கு தற்போதைய நிர்வாக சபையே தொடர்ந்து இயங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

மக்கள் சென்ற பின்னும் சிவசேனை அமைப்பினர் பொது நோக்கு மண்டபத்தில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.