ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சி – பழனி திகாம்பரம் எம்.பி கண்டனம்

மலையகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்தமையை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம் இத்தகையோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன முரண்பாடுகள் நாட்டில் அமைதியின்மையையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

அதேநேரம், மலையகத்தில் இன மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நேரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் கடந்த வாரம் சில இனவாதிகள் இரவு நேரத்தில் புத்தரின் சிலை ஒன்றை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளமை வன்மையாகக் கண்டிக்கத் தக்க விடயமாகும்.

கடந்த காலங்களில் மலையகக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தில் இருந்த நேரங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் எங்கும் நிகழவில்லை. ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகங்களினால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு, தோட்டத்தில் உள்ள இந்து ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கவும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய நிலைமை மேலும் தொடருமானால் மலையகம் கொந்தளிக்கும் நிலை உருவாகும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை வைத்துதான் மலையக மக்கள் தேர்தலில் அதிகமான வாக்குகளைக் கொடுத்து ஆதரவு தெரிவித்து ஆட்சி பீடம் ஏற்றி வைத்துள்ளர்கள். அந்த மகக்ளுக்கு துன்பங்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும், பாதுகாக்க வேண்டிய கடமையும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

எனவே, புத்தர் சிலையை வைத்து இன முரண்பாட்டை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து இத்தகையை சம்பவங்கள் ஏனைய இடங்களுக்கும் பரவாமல் இருக்க அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மலையகத்தில் இனவாதம் தலைதூக்கும் போது முளையிலேயே கிள்ளியெறிந்து தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்ற ஒற்றுமையை கட்டிக் காக்க முன்வர வேண்டும்.

மலையக மக்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்து வருகின்ற நேரத்தில் இனமுறுகல் ஏற்படுமாயின் அது நாட்டின் பொருளாதரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்றும் குறிபிட்டுள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *