தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான சுழற்சிகள் நிலவி வரும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அமித் ஷா, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்குக் கட்சி பாகுபாடின்றி பல முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்திற்கே சென்று அமித் ஷாவைச் சந்தித்தனர்.
சென்னையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.
திருவண்ணாமலை அடி அண்ணாமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கிய அவர், காரில் பே கோபுரம் வழியாக அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புத் தரிசனம் செய்தார். கோயில் தரிசனத்தை தொடர்ந்து, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்மிக்க ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு சென்று அமைதி வழிபாடு நடத்தினார்.
அமித் ஷா பே கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைய இருந்த போது, கோபுரத்திற்கு எதிரே உள்ள கைலாசா திருவண்ணாமலை நித்தியானந்தா பிறப்பிட ஸ்தலத்தில், அவரைச் சந்திக்க புத்தகங்களுடன் காத்திருந்த நித்தியானந்தாவின் சீடர்களை பாதுகாப்பு கருதி காவலர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை ஆன்மீகப் பயணத்திற்குப் பிறகு, அமித் ஷா, சாலை மார்க்கமாக புதுச்சேரிக்குச் செல்கிறார்.
அங்கு கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட விழாவில், புதுச்சேரி காவல் துறைக்கு மதிப்புமிக்க ‘ஜனாதிபதியின் கொடி’ (President’s Colour Award) விருதை வழங்கி உரையாற்றுகிறார். அத்துடன், காவலர்களின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்கிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு, புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பும் அவர், அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்வார்.
Leave a Reply