பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தியோர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால், அங்கு சந்தைகள், கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்துடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

பாக்., அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கங்கள் எழுப்பினர்; பேரணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாக்., ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போர்க்களமாக மாறியுள்ளது.

அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள், கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன. கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடந்துள்ளன.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *