குருக்கள்மடம் இராணுவ முகாமை உடனடியாக அகற்ற வலியுறுத்தல்

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் இராணுவ முகாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதோடு, அருகில் உள்ள சிறுவர் பூங்கா எமது பிரதேச சபைக்கு சொந்தமானது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த விளையாட்டு முற்றத்தை இன்று(15.09.2025) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் பார்வையிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குருக்கள்மடம் சிறுவர் விளையாட்டு பூங்கா கவனிப்பார் அற்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக பாவனைக்குதவாத நிலையில் காணப்பட்டு வருகின்றது.

சுனாமி அனர்த்ததின் பின்னர் இராணுவம் குருக்கள்மடம் பழைய பாடசாலைக்கு வருகைதந்து அங்குள்ள கட்டடங்களில் இராணுவ முகாம் அமைத்து தற்போது வரையில் அவர்கள் அதில் முகாமிட்டுள்ளனர்.

எனினும் அங்குள்ள சிறுவர்களும், பெரியவர்களும் அங்கு அமைந்துள்ள விளையாட்டு முற்றத்திற்குச் சென்று வருவது தடைப்பட்டுள்ளதாக குருக்கள்மடம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் சிறுவர் விளையாட்டு பூங்காவை குருக்கள்மடம் மக்களின் கோரிக்கையை இணங்க உடனடியாக புனரமைப்புச் செய்து சிறுவர் விளையாட்டு பூங்காவை மேலும் விஸ்தரித்து, மக்கள் பாவனைக்காக வெகுவிரைவில் விடப்படும் என தவிசாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *