சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த பின்னணியில் கற்கோவளத்தில் கடற்றொழில் வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு கடற்றொழிலாளர் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வ.வசந்தகுமார் (வயது-30) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை கடற்றொழில் மறிப்பு போராட்டத்தை குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சட்டவிரோத மணற்கடத்தல் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply