யோஷிதவின் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரத்மலானை சிறிமல் உயன பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜனவரி 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும், வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பல விடயங்கள் வெளிவந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பிலான நேற்றைய நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கைவிலங்கு போடப்படவில்லை.

ஆனால் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது கைவிலங்கு போடப்பட்டிருந்தார்.

இதன்போது மேலதிக மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, சந்தேக நபருக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கை தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு அல்ல என்றும், பணமோசடியின் கீழ் அவருக்கு எதிராக வேறு பல வழக்குகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

விசாரணை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, கேள்விக்குரிய சொத்தின் பெயரளவிலான உரிமையாளர் டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் என்றும், அவர் சந்தேக நபரின் உறவினர்(பாட்டி) என்றும் கூறப்பட்டுள்ளது.