உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு அதிகளவான வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்
மேலும், உக்ரேனுக்கு முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, இந்த போரில் உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த போரில் ரஷ்யா தோல்வியடைந்து வருவதாகவும், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விளாடிமர் புட்டினின் இந்த விருப்ப போரில், அவரது இழப்புகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேன் – ரஷ்ய போரில் 3½ இலட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாது எனவும், உக்ரைனே வெற்றி பெறும் எனவும் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என வலியுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply