இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதல் புதிய வரி

முட்டை விலையில் 15 சதவீத வற் வரி விதிக்கப்பட உள்ளதென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் தெரிவித்துள்ளார்.

இதனால் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 02 செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அதிகாரசபை மீண்டும் முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது.

அதற்கமைய, வெள்ளை முட்டை 43-47 ரூபாய்க்கும், பழுப்பு நிற முட்டை 45-49 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும்.

இதற்கு முன்னரும் முட்டைக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அது தோல்வியடைந்து தொழில் நலிவடையவே காரணமாக அமைந்ததாக செயலாளர் கூறியுள்ளார்.

விலையை குறைக்க, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும் ஒருதலைப்பட்சமாக விலை நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்ணைகளில் இருந்து 42 முதல் 43 ரூபாய் வரையிலான விலையில் முட்டைகள் வெளியிடப்படுவது எப்படி என்றும் அந்த முட்டைகள் 43-47 ரூபாய்க்கு விற்கப்படுவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் விவசாயிகள் உற்பத்தியை கைவிட்டால் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி முதல் முட்டை விலையில் 15 சதவீத வற் வரி விதிக்கப்பட உள்ளது, அப்போது முட்டை விலை மேலும் உயரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.