யாழில் தெருவோர கடைகளுக்கு 35 ஆயிரம் தண்டம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவு கையாளும் நிலையங்களுக்கு நீதிமன்றத்தால் 35ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவு தெருவோர வியாபார நிலையங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் சில வியாபார நிலையங்கள் இயங்கியமை பரிசோதனையில் இனங்காணப்பட்டது.

அவ்வாறு இனங்காணப்பட்ட மூன்று வியாபார உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது மூன்று கடை உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த நீதவான் , அவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.