யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் , அதனை வாங்கிய நபர் ஒருவருமாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
யாழ், நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினுள் பூட்டி பாதுகாப்பாக வைத்திருந்த சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை , துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்த நபர் ஒருவர் களவாடி சென்று இருந்தார்.
கையடக்க தொலைபேசி களவாடப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்டவரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் கையடக்க தொலைபேசியை களவாடிய நபரை கண்டறிந்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், களவாடப்பட்ட தொலைபேசியை வாங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து தொலைபேசியையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply