யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் நாயக திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ள காரணத்தால், திணைக்களத்தில் காணிகளுக்கான தோம்பு மற்றும் உறுதி பிரதிகளை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
விற்பனைக்கு பிந்திய சேவையில் திருப்தியின்மை.
இயந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களே விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதானல். அவர்களே பழுதுகளை சரி செய்ய ஊழியர்களை அனுப்பி வைப்பார்கள். இயந்திரங்கள் பழுந்தடைந்தமை தொடர்பில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அவர்கள் தமது ஊழியர்களை அனுப்பாதமையால் ,இயந்திரங்கள் திருத்தப்படாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களுக்கு வீண் அலைச்சல்.
தூர இடங்களில் இருந்து வருபவர்கள் , அவசர தேவை உடையவர்கள் ஒருநாள் சேவையை நாடுகிறார்கள். ஒருநாள் சேவைக்கான கட்டணங்கள் அதிகமாகும்.
தோம்பு ஒன்றினை ஒருநாள் சேவையில் பெற 200 ரூபாயும் சாதாரண சேவையில் பெறுவதற்கு 120 ரூபாயும் அறவிடப்படுகிறது.
அதேபோன்று உறுதி பிரதி ஒன்றினை ஒருநாள் சேவையில் பெற ஆயிரம் ரூபாயும் சாதாரண சேவையில் பெற 600 ரூபாயும் அறவிடப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அவசர தேவைக்காக, காலையில் ஒருநாள் சேவைக்கு விண்ணப்பித்து, மதியத்திற்கு பின்னர் அதனை பெற செல்லும் போது , இயந்திரம் பழுந்தடைந்து விட்டது என உத்தியோகஸ்தர்கள் கூறுவதால், சேவையை பெற சென்றவருக்கு வீண் அலைச்சலுடன் பணமும் நஷ்டமடைகிறது.
ஒருநாள் சேவையை பெறவே அதிக கட்டணம் செலுத்தும் நிலையில் மறுநாள் அவற்றை வழங்குவதால் , அது சாதாரண சேவையாகவே கருதப்படும். ஆனால் ஒருநாள் சேவைக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்கும் நிலையும் இல்லை.
இதனால் சேவைகளை பெற செல்லும் மக்கள் மாத்திரமின்றி சட்டத்தரணிகள் மற்றும் நொத்தாரிசுகள் கூட சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தி , பதிவாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு குறைப்பாடுகள் சிலவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேவை பெற வந்தவர்கள் கோரினார்கள்.
உத்தியோகஸ்தர்கள் பற்றாக்குறை.
அதேவேளை யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்படப்படாமல் உள்ளமையால் , திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கடும் வேலை சுமைகளுடன் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிடங்களை நிரப்புமாறு பதிவாளர் நாயக திணைக்களத்திடம் பல தடவைகள் கோரியும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அத்துடன் சில நேரங்களில் காகிததாதிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்வதில் கூட உத்தியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மழை காலங்களில் கீழ் தளத்தில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு.
யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களம் ஊடாக நாளாந்தம் சுமார் 3 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தினை பதிவாளர் நாயக திணைக்களம் பெற்றுக்கொள்கின்ற போதிலும் , மாவட்ட திணைக்களத்தை வினைத்திறனுடன் மக்களுக்கு சேவை செய்வதற்குரிய வசதிகளை செய்து கொடுக்காது. தலைமை அலுவலகம் அசண்டையீனமாக காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
போராட்டம் நடத்த முனைப்பு
யாழ்.மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகள், வள பற்றாக்குறைகள் தொடர்பில் தலைமை அலுவலகமான பதிவாளர் திணைக்களத்திற்கு பல தடவைகள் முறையிட்டும் எந்த பயனும் இல்லாத நிலையில், திணைக்களத்தின் 160 ஆவது ஆண்டினை முன்னிட்டு , எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி பதிவாளர் நாயகமான டபிள்யு.ஆர்.ஏ.என்.எஸ்.விஜயசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் அவரிடம் நேரில் கோரிக்கைகளை முன் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை நேரில் முன் வைத்த பின்னர், ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply