கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு தமிழ் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த கைதிகளை அவர்கள் இன்று (07.05.2024) கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேர்ந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையுமே அவர்கள் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆனந்தவர்ணன், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.